திருச்சி, சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமியின் மகள் கங்காதேவி, எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம், வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த முள்ளுக்காட்டில் கொட்டச் சென்றவள், அதன்பின் மாலை வரை வீடு திரும்பவில்லை. காணாமல் போன மாணவியைத் தேடியபோது, அவள் குப்பை கொட்டச்சென்ற முள்ளுக்காட்டுப் பகுதியிலேயே உடல் கருகிய நிலையில் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது.
அவளை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்காலாமென்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா மற்றும் சோமரசம்பேட்டை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிறுமி எரித்துக்கொல்லப்பட்டுக் கிடப்பதை அடையாளம் காட்டிய உறவினர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் உடல், பிரேதப் பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக எவரேனும் சிறுமியைக் கொன்றிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 14 வயது சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையமும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.