Thetimes24 Logo

"திருக்கோவில் தொலைக்காட்சி"... வீட்டிலிருந்தே சுவாமி தரிசனம்... அறநிலையத்துறை அதிரடி!

 

கோயிலுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தே சுவாமி தரிசனம் செய்யும் வகையில், திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க தமிழக அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட , திருக்கோயில் எனும் பெயரில ரூ.8.77 கோடி மதிப்பில் தொலைக்காட்சி தொடங்க அறிவிப்பு வெளியிடப்படடுள்ளது.

திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களில் நடைபெறும் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளும் ஒளிப்திவு செய்யப்பட்டு தேவையான எடிட்டிங் மற்றும் வர்ணனைகள் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்திட அறிவுறுத்தப்பட்டு சில திருக்கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் ஆணையர் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு செய்யப்பட்ட (வீடியோ) ஆவணப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு சில திருக்கோயில்களின் ஆவணப்படங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன.

தற்பொழுது சிறப்பான வீடியோ ஒளிப்பதிவுகளைக் கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றி தயார் செய்திட அறிவுறுத்தப்படுகிறது. திருக்கோயில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்திட அதிகளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும்  4K Resolution Camera உள்ள வீடியோகிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திடவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ ஆவணப்படங்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

1. திருக்கோயில் வளாகம், முகப்பு, விமானங்கள், கோபுரங்கள், திருக்கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்கம் பதிவுகள் இடம்பெற வேண்டும்.

2. திருக்கோயில் அமைவிட விவரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்.

3. திருக்கோயில் தல வரலாறு (பின்னணி வர்ணனை, தேவையான காட்சிகளுடன்)

4. திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் (பின்னணியில் சம்பந்தப்பட்ட திருக்கோயில் தொடர்பான பாடல்கள் இசையுடன்)

5. திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள் மிகவும் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும். (30 Seconds)

6. திருக்கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெற வேண்டும்.

7. திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், நடைபெறும் நேரம் தங்க ரதம் போன்றவற்றிற்கான கட்டண விபரங்கள், நடைபெறும் நேரங்கள் குறிப்பிட வேண்டும்.

8. திருக்கோயிலின் மண்டபங்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் பொழுது மண்டபத்திற்கான சரியான பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும். (குறிப்பாக RCC மண்டபம், ஓட்டு மண்டபம் என கட்டிடத்தின் தன்மையை தெரிவிக்கக் கூடாது.

9. ஒளிப்பதிவில் திருக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் காட்சியில் வரும்போது அங்கீகரிப்பட்ட ஆடைகளை மிகவும் தூய்மையாக அணிந்திருக்க வேண்டும்.

10. ஒளிப்பதிவு செய்யப்படும் கோயில் வளாகங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரே நிகழ்ச்சிகள் திரும்ப, திரும்ப இடம் பெறக்கூடாது.

11. ஒளிப்பதிவுக் காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்.

12. ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் பொழுது அவற்றின் முழுமையான உருவங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். (கால், கை, தலை என தனித்தனியாக இல்லாமல் முழுமையான தோற்றம் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்) சுவாமி உருவங்களை தூரத்தில் இருந்து நெருக்கமான காட்சிகளாக மிகவும் அழகாக காண்பிக்க வேண்டும்.

13. தலச்சிறப்பைச் சொல்லும்போதும் ஓதுவார்கள் பாடும் போதும் அவர்களது உருவத்தை கீழ் ஓரத்தில் அஞ்சல்வில்லை அளவில் காண்பித்தால் போதும். அந்த நேரத்தில் சிற்பங்கள் அல்லது திருக்கோயிலின் சிறப்பான பகுதிகளைக் காட்சிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.

14. ஓதுவார் பாடல் காட்சிப்படுத்துதல் சில மணித்துளிகளுக்கு மேல் போகக் கூடாது.

15. அடிக்குறிப்பில் அபிஷேகப் பெயர்கள் அச்சுப்பிழை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

16. ஒரு திருக்கோயிலின் வீடியோ ஆவணப்படம் தயார் செய்யும் பொழுது அந்த திருக்கோயிலின் அனைத்து நிகழ்வுகளும் தொடர் நிகழ்ச்சிகளாக ஒரே CD யில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

17. முதுநிலை திருக்கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்யும் பொழுது அவற்றின் உபதிருக்கோயில்கள் குறித்த நிகழ்வுகளையும், சிறப்புகளையும் இடம்பெற செய்திடலாம்.

18. இனி வருங்காலங்களில் திருக்கோயில் நிகழ்வுகள் 4K Resolution உள்ள கேமரா மூலம் மட்டுமே ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும்.

19. மூலிகை ஓவியங்கள், புரதான கல்வெட்டுகள் இருந்தால் அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட அனைத்து குறிப்புகளையும் வீடியோ ஆவணப்படங்கள் எடுப்பதற்கும், திருக்கோயில்களில் இனி நடைபெறும் நிகழ்வுகளை வீடியோ ஒளிப்பதிவு செய்திடவும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English Summary

Tirukovil Television Swami Darshan at Home

Thetimes24 Logo