கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த ஒருவர் உணர்ச்சிமேலிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மிக சிறப்பாக உள்ளதாக அதில் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா முகாம்கள் அமைத்தும், வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்தும், மக்களின் துயரைப் போக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர், தன்னார்வலர்கள், வாகன ஓட்டுகர்கள் என பலர் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணி செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதித்து, மருத்துவ முகாம்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் மிகுந்த அக்கறையோடு அணுகி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சையால், கொரோனாவில் இருந்து மீண்ட கோவையைச் சேர்ந்த ஒருவர், தமிழக அரசு மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை குறித்தும், கொரோனா தடுக்கும் பணியில் அம்மாவின் அரசு தாயைப்போல் அரவணைத்து காப்பாற்றுவதாக கூறியுள்ளார்.
விடியோவின் துவக்கத்தில், அரசு மருத்துவமனையில் தங்கி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் பெற்று 9-வது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு செல்வதாக கூறும் அவர், தனியார் மருத்துவமனையில் தான் பெற்ற அனுபவத்தை மிகுந்த கசப்புடன் வீடியோவில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றபோது நிறைய அனுபவங்களைப் பெற்றதாகவும், இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் தனக்கு ஒரு பாடம் என்றும், தனியார் மருத்துவமனைகள் எப்படி மக்களை ஏமாற்றுகிறது என்பதையும் அவர் கூறுகிறார். தனியார் மருத்துவமனைகளில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாதபோது மக்களை எவ்வாறு கைகழுவி விடுகிறார்கள் என்பதை தான் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தான் சென்றபோது, தன்னை சோதனை செய்த மருத்துவர்கள், ஜூரம் உள்ளதாகவும் வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் கூறி, நீங்கள் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்றார்கள். என்னிடம் இருந்து வேறு எந்த பதிலையும் எதிர்பார்க்காத அவர்கள், ஸ்டெச்சரில் கொண்டு வந்து மருத்துவமனைக்கு வெளியே போட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்று வேதனையுடன் கூறுகிறார். தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் எவ்வாறு அலட்சியப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அன்று உணர்ந்ததாகவும், மிகவும் மோசமான நிலையில், என்னை ஸ்டெச்சரில் போட்டுவிட்டு சென்றது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் கூறுகிறார்.
மருத்துவமனைக்கு வெளியே ஸ்டெச்சரில் என்னைப் பார்த்த என் மனைவி பதறிப்போய், உடனடியாக என்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். அங்கு உடனடியாக அட்மிஷன் போடப்பட்டு, மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையை மேற்கொண்டார்கள். அரசு மருத்துவமனைகள், மக்களுக்கு எந்த அளவுக்கு நன்மை செய்து வருவதை அப்போதுதான் அதை அனுபவித்தேன்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு மிகவும், அருமையாக, அட்டகாசமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று பாதித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு கொடுக்கப்படும் உணவு, டீ உள்ளிட்டவை தரமானதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் நோயாளிகளை மருத்துவர்கள் சோதனை செய்வதாகிலும் அரசு மருத்தவமனையின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது என்கிறார்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளைக் கவனிக்கும் விஷயத்தை தான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் என்கிறார் அவர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் கொரோனாவுக்கு சிகிச்சை, 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மருத்துவமனையில் அனுமதி என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற எந்தவொரு குறைகளும் அரசு மருத்துவமனைகளில் கிடையாது என்றும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிறப்பாக மருத்துவம் பார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் மிகுந்த நம்பிக்கையோடு அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.