தென்காசியில் வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து விவசாயி, தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட அணைக்கரை முத்துவு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
அதையடுத்து ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அணைக்கரை முத்துவின் உடல் எடுத்து செல்லப்பட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “ வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றார் போல் அரசுப்பணி வழங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்படுள்ளது.