ஆவின் நிறுவனம், இன்றைய தினம் ஐந்து புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீ மேட் பால் ஆகிய ஐந்து பொருட்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் கே.டிராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் ஆவின் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள 5 பொருட்களும் 90 நாட்கள்வரை கெடாத தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லவை. புதிய ஆவின் மோரில், இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கி உள்ளன. எனவே இயற்கை ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான மோராக இருக்கும்.
இதுகுறித்த ட்விட்டர் செய்திக்குறிப்பில், "தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் விற்பனையில் முன்னோடியாக திகழும் ஆவின் நிறுவனம் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீ மேட் பால் ஆகிய 5 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.