தமிகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் கவனத்தை, ஆபாச வலைத்தளங்கள் சிதறடிக்க வாய்ப்புள்ளதாகவும், அவற்றை அணுக முடியாதபடி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நிதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல், ஆன்லைன் வகுப்புகளை செல்போன், லேப்டாப் மூலம் பார்ப்பதால், மாணவர்களின் கண் பார்வை பாதிக்கப்படுவதாகவும், இதனால் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து, அரசு கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்த்ரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் சங்கரநாராயணன், வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.