கன்னியாகுமரி தொகுதி எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்த கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமாருக்கு கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தும், அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் அவர் கவலைக்கிடமான நிலைக்கு சென்றார். அதையடுத்து, நேற்றிரவு 7மணிக்கு சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.
வசந்தகுமாரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மக்களவை எம்பி வசந்தகுமாரின் மறைவு வருத்தமளிப்பதாகவும், வர்த்தகம் மற்றும் சமூக சேவைகளில் அவரது முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். வசந்தகுமாருடன் உரையாடிய போது தமிழகத்தின் வளர்ச்சி குறித்த அவரது ஆர்வத்தை கண்டதாகவும், பிரதமர் தனது பதிவில் கூறியுள்ளார்.
அதேபோன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட இரங்கல் செய்தியில், வசந்தகுமாரின் மறைவு தமிழக மக்களுக்கும் குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்த வசந்தகுமார் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் அன்பைப் பெற்றவர் அவர் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.