வாரவிடுமுறை போல், ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மேளாவுக்கு ஒரு நாள் விடுமுறை விட்டிருந்தார் தமிழக வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி.உதயக்குமார். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணியவர் இதோ மீண்டும் ஸ்டாலினின் குறைகள் மற்றும் தத்துப்பித்து தவறுகளைச் சுட்டிக்காட்டி வெளுக்கத் துவங்கிவிட்டார்.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று கண்டறியும் வாரம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை துவக்கி வைத்துப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் “ஆரம்ப நிலையிலேயே நோய் தொற்று கண்டறியும் காரணத்தினால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. ஆனாலும் நோய்த்தொற்றில் பலியாவோர்களை கவனித்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே அந்த நோயால் அவதிப்படும் நபர்களுக்கு, கொரோனாவும் ஏற்பட்டுவிட்டால் அவர்களை காப்பாற்றுவது பெரும் சவாலாக உள்ளது.
இருந்தாலும் முதல்வர் எடப்பாடியார் தனது தீவிர உழைப்பின் மூலம், மருத்துவ நிபுணர்களுடனான தொடர் ஆலோசனைகளின் மூலம் பல அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, தமிழகத்தில் கொரோனாவின் வீரியத்தை மிக கடுமையாக கட்டுப்பத்திவருகிறார்.
ஆனால் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் சிலர் அவரை பொய் விஷயங்களால் குறை கூறிக் கொண்டிருப்பது, வதந்தி கிளப்புவது என்று இருக்கிறார்கள். இவர்களை என்ன செய்தாலும் திருத்த முடிவதில்லை. முதலின் தான் சரியாக இருந்தால்தான் அடுத்தவர்களைப் பற்றிக் குறை கூற வேண்டும். ஆனால் தன் முதுகில் மூட்டை மூட்டையாய் அழுக்கை வைத்துக் கொண்டு, எதிராளியின் கண்ணில் தூசி இருப்பதாக, அதுவும் புரளியை கிளப்புவது என்ன அரசியல்?
மறைந்த தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் படத்திறப்பின் போது முகக்கவசம் அணியாமல் அந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார் மு.க. ஸ்டாலின். அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன்னதாக அவர் முன்னுதாரணமாக பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும். முதலில் தான் சரியாக நடந்துவிட்டு அதன் பின் ஆலோசனைகளை கூறட்டும்.” என்று சாடியுள்ளார்.
சர்தானே!