மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது மும்மொழிகளை கட்டாயமாக்குகிறது! இதன் மூலம் இந்தியை வலிய திணிக்கிறது, இதை தமிழகத்தில் ஏற்க முடியாது. தமிழகம் என்றுமே இரு மொழிக் கொள்கையை மட்டுமே ஏற்கும் மாநிலம்! என்று பட்டாசுகள் கடந்த சில நாட்களாக வெடித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழக அரசின் நிலைப்பாடும் இதுவே என்பதை முதல்வர் எடப்பாடியார் தனது அறிக்கை மூலமாக தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டார். இதற்கு பா.ஜ.க.வின் தமிழக நிர்வாகிகளோ ”தமிழக அரசையும், முதல்வரையும் முனோடியானவர்கள் என்று நினைத்தோம். ஆனால் இப்படி எதிர்ப்பது சரியா? இந்தி கற்பதன் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கும் அறிவு விசாலமாகும். பிற்காலத்தில் பணிக்காக வட மாநிலங்களுக்குச் சென்றாலும் அவர்கள் சிறப்பாக இயங்கிட இது கைகொடுக்குமே.” என்று விமர்சனம் வைத்தார்கள்.
இதற்கு தமிழக அரசின் சார்பாக மிகச் சரியான விளக்கத்தை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.அதில்....”தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்த முதல்வரின் அறிவிப்பை அனைத்து கட்சியினரும் வரவேற்றுள்ளனர். மும்மொழி கொள்கையை ஆராய தனிக்குழு அமைத்து, அக்குழுவின் அறிக்கைக்கு பின்னர் அது குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக கல்வி முறையில் கட்டாய திணிப்பை எதிர்க்கிறோமே தவிர கல்வி கற்பதில் எந்த தடையுமில்லை.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வித் திட்டமும், பள்ளிகளின் செயல்பாடுகளும் எந்த விதத்தில் இருக்கிறதென்றால் பாமர பிள்ளைகளும் சிறப்பாக, உயரிய, எதிர்கால போட்டி யுகத்தில் தாக்குப்பிடித்து நின்று சாதனை படைக்கின்ற கல்வியை கற்க வேண்டும். அதேவேளையில் ஏழை குழந்தைகள் சத்தாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்! என்பதை மையப்படுத்தியேதான் இருக்கிறது.
அதனால்தான் தமிழகத்தில் அரசுப் பள்ளி பிள்ளைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், புத்தகப் பைகள் கூட இலவசமாய் வழங்கப்படுகிறது. அது போக சத்தான உணவும் அரசால் வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம், அரசின் நோக்கமானது தமிழக மாணவ - மாணவியர் தலைசிறந்த தலைமுறையாக உருவெடுக்க வேண்டும் என்பதே! என்பது புரியும்.
இந்தி உள்ளிட்ட புதிய மொழிகளை கற்பதற்கு எந்த தடையோ, எதிர்ப்போ, முட்டுக்கட்டையோ இடவில்லை. வசதி வாய்ப்பான வீட்டுப் பிள்ளைகள் போல் அனைத்துக் குழந்தைகளும் சிறப்பாகப் பயில வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு.” என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இதை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் புரிந்து கொண்டுள்ளது, கூடவே விசாலமான அறிவை பெற வேண்டும்! என்று நினைக்கிற தமிழக எளிய குடும்ப பெற்றோர்களும் மகிழ்ந்துள்ளனர்.