Thetimes24 Logo

முரண்பாடான அரசியல் செய்யும் திமுக - அறிக்கையில் விளாசிய அமைச்சர் தங்கமணி

 

 

தமிழகத்தில் அதிகளவில் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறை கூறுவதன் மூலம் திமுகவின் முரண்பாடான அரசியல் வெளிப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள இந்த சூழலில் தமிழகத்தில் அதிகளவில் மின்கட்டணம் வசூலிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். அவரது விமர்சனத்திற்கு அறிக்கை மூலம் அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார். அவரது அறிக்கையில், மின்சாரம் என்பது மக்களின் அத்யாவசிய தேவை என்று கூறும் எதிர்க்கட்சி தலைவர், திமுக ஆட்சியின் மெத்தனத்தால் தான் தமிழகம் இருளில் மூழ்கியதை மறந்து சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக கடுமையாக சாடினார். கடந்த 10 ஆண்டுகளாக எடுத்து வரும் அதிமுக அரசின் சீரிய நடவடிக்கைகளால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம்மில்லாமல் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கவே தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது என்றும், தொற்று பரவல் காரணமாக மின் பகிர்மான பணியாளர்கள் வீடுதோறும் சென்று மின் கணக்கீடு செய்யவில்லை எனவும் விளக்கம் கொடுத்த அமைச்சர், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம்  கணக்கீட்டு தொகையை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்தமாறும் அறிவுறுத்தப்பட்டதை அறிகையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கணக்கீட்டு முறை தவறு என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் அரசின் கணக்கீட்டு முறையை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி ஒவ்வொரு இரண்டு மாத கணக்கீட்டிலும் தனித்தனியே 100 யூனிட் இலவச மின்சாரமும் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டுள்ளதை உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளதையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் எதிர்க்கட்சி தலைவர் தனது தொலைக்காட்சி பேட்டியில் மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக காண்பித்த ஆணவம் ஒன்றை ஆய்வு செய்ததில் அந்த நபர் வீட்டு மின்நுகர்வோர் இல்லை என்பதும், அவர் தொழில் மின் நுகர்வோர் என்பதும் ஆய்வில் தெரிய வந்ததாக தெரிவித்த அமைச்சர், தொழில்மின்நுகர்வோர் அட்டையை காட்டி மக்களை திசைத்திருப்ப முயலும் ஸ்டாலினுக்கு அறிக்கையில் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். அதுமட்டுமின்றி 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மூலம் சுமார் 2.1 கோடி குடும்பங்கள் பயன்பெருவது மக்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய சலுகை என்று எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியவில்லையா ? என அமைச்சர் தங்கமணி ஸ்டாலினை நோக்கி கேள்வியும் எழுப்பியுள்ளார். 

இலவச மின்சாரம் மூலம் மின்சார வாரியத்திற்கு ஏற்படும் செலவை ஈடுகட்ட 4 வருடங்களில் ரூ.11,512 கோடி வரை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மட்டும் இந்த சிறப்பான திட்டம் செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட மின்கட்டண கணக்கீட்டு முறையை ஸ்டாலின் குளறுபடி என்று கூற, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்று கூறுவது திமுக செய்யும் முரண்பாடான அரசியலை தெளிவாக  காட்டுவதாக அமைச்சரின் அறிக்கை கூறுகிறது.  

இறுதியாக கொரோனா ஊரடங்கில் அரசு எடுத்து வரும் நலத்திட்டங்களை பட்டிலியலிட்ட அமைச்சர் தங்கமணி, திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியலை செய்துவருவதாக சாடியுள்ளார்.

English Summary

Minister thangamani slaps DMK

Thetimes24 Logo