Thetimes24 Logo

ஸ்டாலினின் பாவ சாம்ராஜ்யத்தை மக்களே சரிப்பார்கள்: சாபமிட்ட அமைச்சர். 

 

தமிழகத்தை ஆளும் அரசுக்கு எதிராக தி.மு.க.  எடுத்து வைக்கும் புரட்டுகளில் மிக முக்கியமானது ‘தமிழக அமைச்சர்களுக்கு நடுவில் ஒற்றுமை இல்லை. ஒருவரை ஒருவர் பொறாமையில் திட்டிக் கொண்டுள்ளனர்.’ என்பதே. ஆனால் ஸ்டாலின் டீமின் இந்த தர்க்கத்தை உடைத்து சுக்கு நூறாக்கியுள்ளது அ.தி.மு.க. ஆம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தி.மு.க.வின் விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அவதூறு அறிக்கைக்கு காட்டமான பதிலடியை தந்துள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் .  அதில்....

“அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ராமச்சந்திரன் அவதூறு அறிக்கையை ஏவியிருப்பது, தி.மு.க.வில் தனது இருப்பை நிரூபித்துக் கொள்ளத்தானே அன்றி வேறில்லை. இதெல்லாம் அவரது தரத்தை குறைக்கிறது. ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்தது போல அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சாத்தான் குளம் சம்பவத்தில் முதல்வர் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கல் நெஞ்சம் கொண்டவர்களாக கொச்சை அறிக்கைகளை வெளியிடுகின்றனர். போலீஸை கைது செய்கையில் பின்பற்ற வேண்டிய அரசு நடைமுறைகள், சிறைத்துறை நடைமுறைகள் என சில உண்டு. அதை எல்லாம் அரசு மிக முழுமையாக பின்பற்றியே நடக்கிறது. ஆனால் இவர்களோ அதை எதிர்க்கின்றனர். 

சட்ட ரீதியான குறிப்புகளை வைத்து முதல்வர் பேச, அதைத்தான் அமைச்சரும் குறிப்பிட்டார். ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு, தி.மு.க.வில் காலாவதியாகிப் போன தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். 
ராமச்சந்திரனே, உங்கள் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் மக்களின் நம்பிக்கையை சேவை மூலம் பெற்று உயருங்கள். இப்படி அவதூறு அறிக்கையை வெளியிட்டால், தரம் தாழ்ந்துதான் போவீர்கள். அ.தி.மு.க.வின் மூலம் அடையாளம் பெற்ற நீங்கள் தி.மு.க.வில் அடைக்கலமாகி, அங்கே மாவட்ட செயலாளர் பதவியை பெற செய்த யாசகத்தை வெளிப்படையாக கூறுவீர்களா? அந்த யாசகத்தை விளக்கிவிட்டு, எங்கள் மீது விமர்சனம் வையுங்கள் பார்ப்போம். 

நீதியை நிலைநாட்ட சி.பி.ஐ. விசாரணை முடிவை எடுத்துள்ளார் முதல்வர்.  உடனே ‘அது விசாரணையை காலதாமதப்படுத்தும்.’ என்றார்கள் எதிர்க்கட்சியினர். ஆனால், சி.பி.ஐ. விசாரணை வைக்காவிட்டால் ‘நீதியை மறைக்கின்றனர்.’ என்று கூப்பாடு போடுகிறார்கள். இப்படிப் பொய், புரட்டு, வதந்தி, அடிப்படையற்ற செயல்கள் மூலம் நம் முதல்வரை அசைத்துப் பார்க்க முயல்கின்றது ஸ்டாலின் தலைமையிலான எதிர்தரப்பு.

ஆனால் அது ஒரு போதும் நடக்காது. களத்தில் காணாமல் போன ஸ்டாலின், தன் கட்சியினரை உசுப்பிவிட்டு மக்களின் மனதில் இடம் பிடிக்க நினைத்தார். அது முடியாமல் போனதோடு, எதிர்மறை விளைவை உருவாக்கிவிட்டது. இப்போது பதறிக் கிடக்கிறார். 
மக்களைக் காப்பது ஸ்டாலின் தலைமையில எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இல்லை. அவர்களைக் குழப்புவதே இவர்களின் நோக்கமாக உள்ளது! என்பது தெளிவாக புரிந்துவிட்டது மக்களுக்கு. இதற்கான பதிலை தேர்தலில் தருவார்கள். அதோடு உங்களின் பாவ சாம்ராஜ்யம்  சரிந்து மறையும்.” என்று முடித்திருக்கிறார். 
 

English Summary

minister rb udhayakumar criticize stalin

Thetimes24 Logo