கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, இந்தியா முழுவதுமுள்ள பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு மத்திய அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வகுப்பறையில் நடத்தப்படும் வகுப்புகளுக்கும், ஆன்லைன் மூலமாக எடுக்கப்படும் வகுப்புகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் ரெகுலர் வகுப்புகளைப்போலவே கால அட்டவணை வெளியிட்டு தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்காரணமாக மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. எனவே இவற்றைச் சரிசெய்வதற்காக மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.

அதன்படி, எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும். அதற்கு மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி அவர்களைச் சிரமப்படுத்தக்கூடாது. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 45 நிமிடங்கள் என்ற கால அளவில், தினசரி இரண்டு ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டும். அதேபோல, 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் தினசரி நான்கு வகுப்புகள்வரை நடத்தலாம். இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படும் கல்வி நிறுவனங்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படும்!