தமிழ் திரையுலகில் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் தற்போது நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகியோரை வைத்து ‘டெடி’என்ற படத்தை இயக்கி உருவாக்கியுள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் மகிழ் திருமேனி, கருணாகரன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் டெடி என்ற பொம்மையும் முழு படத்திலும் பயணிக்கும்படி கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் ஆர்யா - சாயிஷாவின் முதலாம் ஆண்டு திருமணநாளில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது. அண்மையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின், யாதுமாகி நின்றாய் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து காக்டாயில், டேனி போன்ற படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளன.
இந்த நிலையில் டெடி திரைப்படமும் இதில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திருமணத்துக்கு பின்னர் ஆர்யா - சாயிஷா நடித்துள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.